மூட நம்பிக்கையாலே – பல
கேடு விளையும் மனிதா – இதை
ஆடுமாடு போலே அறியாமல் வாழலாமா
வெறும் மூட நம்பிக்கையாலே......
பெரும் மூடு பனியைப்போல – உனை
மூடி மறைக்கும் மடமை
அறிவோடு எதையும் நீயே
ஆராய வேணும் மனிதா......பகுத்தறிவோடு
ஆராய வேணும் மனிதா....
மலையோடு மோதி மோதி
கலைந்தோடும் மேகம் போலே
நிலையாத பொய்யை நம்பி
அலையாதே வீணில் மனிதா.....வெறும் (மூடநம்பிக்கை)
இருள் கண்டு பூதம் என்று
மருள்கின்ற மூட மனிதா
இருள் என்று கண்ட பின்னே
மருள்கின்ற பூதம் எங்கே.....
விதியென்று எண்ணி எண்ணி
மெலிவாகி நொந்திடாதே
எதிர் நின்று எதையும் வெல்லும்
மதி உண்டு பேதை மனிதா......வெறும் (மூடநம்பிக்கை)