மாடுகள் மேய்த்திடும் பையன் பசு
மாடுகள் மேய்த்திடும் பையன் – தன்னை
மதிப்பவர்க்கே மெய்யன் – இவன்
வானவர்க்கும் புவி மானிடர்க்கும் – சுக
வரமளிக்கும் அய்யன்......(மாடுகள்)
மலையைக் குடையாய் ஏந்திடுவான் – விஷ
மடுவில் தனியாய் நீந்திடுவான்
மாதர்கள் அலற சேலைகள் திருடி
மறைந்தே செல்வான் பொல்லாதவன் இவன்
வானவர்க்கும் புவி மானிடர்க்கும் – சுக
வரமளிக்கும் அய்யன்.......
மண்ணைத் தின்று தன் வாயினில் உலகம்
வளர்வதெல்லாம் காட்டி
மாய்கையினாலே யாரையும் வென்று
மயக்கிடுவான் மலையாதவன்
வலிய மீன் பெரிய ஆமை வராக
வடிவமெல்லாம் எடுப்பான்
மானிடர் காணா ஜால மிகுந்த
மாயா வினோதனே......இவன்
வானவர்க்கும் புவி மானிடர்க்கும் – சுக
வரமளிக்கும் அய்யன்....
பால் தயிர் வெண்ணைப் பானையில் மூழ்கி
பைய நடந்தே ஆடுவான் – அதைப்
பார்த்திடில் தனது பந்தைத் தேடிப்
பார்த்தேன் என்றே ஓடுவான் இவன்
வானவர்க்கும் புவி மானிடர்க்கும் – சுக
வரமளிக்கும் அய்யன்..........(மாடுகள்)