Artist profile
MuthukoothanTamil Playback Singer – Song Lyrics & Movies
முத்துக்கூத்தன்
About Muthukoothan
- பிறப்பு · Born
- 25 May 1925, Tiruchirappalli district
- மறைவு · Died
- 1 May 2005
ந. மா. முத்துக்கூத்தன் (Muthukoothan; 25 மே 1925 – 1 மே 2005) தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடக-திரை நடிகர், பாடலாசிரியர், கவிஞர், மற்றும் வில்லுப்பாட்டுக் கலைஞர் ஆவார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
தமிழ்நாட்டின் இன்றைய கரூர் மாவட்டம் குளித்தலை நகரை அடுத்த பொய்யாமணி என்னும் ஊரில் 25 மே 1925 அன்று மாரியம்மாள் - நமச்சிவாயம் இணையருக்குப் பிறந்தார் முத்துக்கூத்தன்.
1942 முதல் நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் கலைப்பணிகளைத் தொடங்கியவர். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமியின் "கிருட்டினன் நாடக சபா", எஸ். எஸ். ராஜேந்திரன் நாடக மன்றம், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஆகிய நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நகைச்சுவை வேடமணிந்து நடித்தவர்.
இவர் 1952 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராகப் பலவகையில் பங்களித்தவர். பராசக்தி, இரத்தக்கண்ணீர் , இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதிய பூமி, தாய் மகளுக்கு கட்டிய தாலி உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தவர்.
இவர் 1953 ஆம் ஆண்டிலிருந்து அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலை அரசி, மந்திரவாதி, திருடாதே, அரச கட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல், உரையாடல் எழுதியவர் ஆவார்.
இவர் கலைவாணர் என். எசு. கிருட்டிணன் பயன்படுத்திய வில் கருவியை, அவர்தம் துணைவியார் டி. ஏ. மதுரமிருந்து அன்பளிப்பாக வாங்கி, வில்லுப்பாட்டுக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர் ஆவார். தென்தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த வில்லுப்பாட்டுக் கலையை வடதமிழகத்தில் பரவலாக்கினார். கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டு வடிவமாக்கி, அவர்தம் முதல் நினைவுநாளான 1958 ஆகத்து 31 இல் கலைவாணரின் இல்லத்தில் நிகழ்த்தினார்.
முத்துக்கூத்தன், 24 அக்டோபர் 1954 அன்று 'பேரறிஞர்' கா. ந. அண்ணாதுரை தலைமையில் மரகதம் என்பவரை சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குப் பிறந்த மகனுக்கு 'கலைவாணர்' என். எஸ். கிருஷ்ணன் நினைவாகக் கலைவாணன் என்று பெயரிட்டனர். இதன்பின் ஐந்து மகள்களும் பிறந்தனர்.
கலைவாணன் (20 நவம்பர் 1957 - 22 மே 2026) பொம்மலாட்டக் கலை வழியே பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வந்தார். தமயந்தி என்பவரை 10 அக்டோபர் 1982 அன்று திருமணம் செய்தார். இவர்களுக்கு முத்தரசன், பகலவன் எனும் மகன்கள் உள்ளனர்.
தன் 80-ஆம் பிறந்தநாளுக்கு மூன்று வாரங்கள் முன்பே 1 மே 2005 அன்று இயற்கை எய்தினார் முத்துக்கூத்தன் .
Source: தமிழ் விக்கிப்பீடியா · text licensed under CC BY-SA 4.0
Muthukoothan · Singers songs · 0
No song lyrics for Muthukoothan as singers yet.