திருக்குறள் - குறள் 227
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஈகை.

திருக்குறள் - குறள் 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.
மு.வரதராசனார் உரை:
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.
பரிமேலழகர் உரை:
பாத்து ஊண் மரீஇயவனை - எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை. (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது
மணக்குடவர் உரை:
பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை. இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எப்போதும் பகுத்துப் பிறர்க்குக் கொடுத்து உண்ணப் பழகிய ஒருவனை, பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டுதல் இல்லை.
Translation:
Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel.
Explanation:
The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்