திருக்குறள் - குறள் 228

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஈகை.


திருக்குறள் - குறள் 228


ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.

மு.வரதராசனார் உரை:
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

சாலமன் பாப்பையா உரை:
இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.

பரிமேலழகர் உரை:
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது


மணக்குடவர் உரை:
கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர். இஃது இடார் இழப்பரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஈதலினைச் செய்யாமல் தம்முடைய பொருளினைப் பத்திரமாக வைத்து இழந்துவிடுகின்ற இரக்கமற்றவர்கள், வறியவர்களுக்கு கொடுத்து அவர்கள் மகிழ்வதனால் தமக்கு வரும் இன்பத்தினை அறியமாட்டார்களோ?.

Translation:
Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?.

Explanation:
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்