திருக்குறள் - குறள் 1217

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: கனவுநிலையுரைத்தல்.


திருக்குறள் - குறள் 1217


நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?.

மு.வரதராசனார் உரை:
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.

சாலமன் பாப்பையா உரை:
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?.

பரிமேலழகர் உரை:
(விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி


மணக்குடவர் உரை:
நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?. இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருபொழுதும் நனவிலே வந்து அன்பு செய்யாத கொடிய காதலர் நாள்தோறும் கனவில் வந்து நம்மை வருத்துவது எந்தப் பொருத்தம் பற்றியோ?.

Translation:
The cruel one, in waking hour, who all ungracious seems,
Why should he thus torment my soul in nightly dreams?.

Explanation:
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்