திருக்குறள் - குறள் 1158

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பிரிவாற்றாமை.


திருக்குறள் - குறள் 1158


இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.

மு.வரதராசனார் உரை:
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது. (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்ப


மணக்குடவர் உரை:
தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது. இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பெண்களுக்குத் தம் குறிப்பு அறியும் துணையான தோழியர் இல்லாத வேற்றூரில் வாழ்வது துன்பம் செய்வதாகும். அதனைவிடத் தம் காதலரைப் பிரிதல் மேலும் துன்பத்தினைச் செய்வதாகும்.

Translation:
'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;
'Tis sadder still to bid a friend beloved farewell.

Explanation:
Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்