திருக்குறள் - குறள் 1151

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பிரிவாற்றாமை.


திருக்குறள் - குறள் 1151


செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்.

மு.வரதராசனார் உரை:
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

சாலமன் பாப்பையா உரை:
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

பரிமேலழகர் உரை:
(பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வா


மணக்குடவர் உரை:
காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு. இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தாங்கள் எம்மைவிட்டுப் பிரியாதிருப்பதென்றால் அதனை எனக்குச் சொல்லுங்கள், பிரிந்துபோய் "விரைவில் வருவேன்" என்பீரானால் அதனைத் தாங்கள் திரும்பி வரும்போது உயிர்வாழ்கின்றவர்களுக்குச் சொல்லுங்கள்.

Translation:
If you will say, 'I leave thee not,' then tell me so;
Of quick return tell those that can survive this woe.

Explanation:
If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்