திருக்குறள் - குறள் 1156
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பிரிவாற்றாமை.
திருக்குறள் - குறள் 1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.
மு.வரதராசனார் உரை:
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.
சாலமன் பாப்பையா உரை:
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றா
மணக்குடவர் உரை:
பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தலைவர் முன்னின்று தம் பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையவராயின் அத்தன்மையர் பிறகு வந்து கூடி அன்பு செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படவேண்டியதாகும்.
Translation:
To cherish longing hope that he should ever gracious be,
Is hard, when he could stand, and of departure speak to me.
Explanation:
If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்