பால் கொடுத்த தனங்கள் சொல்லும்
பார்த்திருந்த கண்கள் சொல்லும்
சொல்லுக்குப் பொருளறியார்
சொல்லிவிட்டு ஓடி விட்டார்.......
நீ தாயுமில்லையாம்
அவன் சேயுமில்லையாம்
அவர் சட்டத்திலே உங்கள்
சொந்தம் காணவில்லையாம்..
பசுவைக் கூட அன்னையென்று
பாடம் சொல்கிறார்
தன் பால் கொடுத்து வளர்த்தவள்
தாயில்லை என்கிறார்
பிள்ளை கன்று போல கதறும்போது
தூக்கிச் செல்கிறார் இனி
கற்பனையில் மகனைக் கண்டு
பேசச் சொல்கிறார்........(நீ)
நீ பூவிழந்து பொட்டிழந்து
போன நாளிலே – உனை
பொறுமை கொள்ள சொன்ன
பிள்ளை கருவிலிருந்தான்..
நீ கண் திறந்து பார்த்தபோது
கையில் இருந்தான் – அன்று
கண்டதெல்லாம் கனவு போல
ஓடி மறைந்தான்.......( நீ )
அன்பறியா மனிதர் உன்னை
ஆடவும் வைத்தார் – நீ
ஆடும்போது மேடை ஏறி
காலை முறித்தார்
நீ கண்ணிழந்த வேளையிலே
கண்கள் கொடுத்தார் – நீ
காணும் வரை பார்த்திருந்து
கண்ணைப் பறித்தார்...,..( நீ )