கால்நடை பராமரிப்பு – முயல் வளர்ப்பு முறை

 0  7
கால்நடை பராமரிப்பு – முயல் வளர்ப்பு முறை
இரகங்கள்

அங்கோரா இனங்கள், இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ, நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை, வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் ஆகிய முயல் இரகங்கள் உள்ளன.

வீட்டு மேலாண்மை

ஒரு முயலுக்கு நான்கு சதுரடி இடம் தேவைப்படும். அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு அமைக்க வேண்டும். தனித்தனியாக கூண்டு செய்யாமல், பத்தடி நீளம், நான்கடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் ஒரு கூண்டு செய்து, அதை இரண்டு, இரண்டு அடியாகப் பிரித்துக் கொள்ளலாம்.

இது வளரும் முயல்களுக்கான கூண்டு அமைப்பு ஆகும். குட்டி ஈனும் முயல்களுக்கு இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 கேஜ் என்ற கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலிற்கு காலில் புண்கள் உண்டாகாது.

ஒரு யூனிட்

ஒரு சினை முயல், பருவத்திற்கு வந்த இரண்டு பெண் முயல்கள் (4 மாதம் வயதுடையவை ), 6 மாத வயதுடைய ஒரு ஆண் முயல், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என மொத்தமாக ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களைக் கொண்டது தான் ஒரு யூனிட்.

முதன் முதலில் வளர்க்க ஆரம்பிப்பவர்கள் ஒரு யூனிட் கொண்டு ஆரம்பிக்கலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித்தனியாக விட்டுவிட வேண்டும்.

தீவன மேலாண்மை

முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் அடர் தீவனங்களையும் கொடுக்கலாம்.

பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும்.

முயல்கள் பொதுவாக பகல்களில் தூங்கும் பழக்க கொண்டவை. எனவே தீனத்தை இரண்டாக பிரித்து காலையில் கால் பங்கும், இரவில் முக்கால் பங்கும் அளிக்க வேண்டும்.

இனப்பெருக்க மேலாண்மை

பெண் முயலானது இந்து மாத வயதில் பருவத்திற்கு வந்துவிடும். பெண் முயலின் பிறப்புறுப்பு சிவந்து தடித்திருப்பதைப் வைத்து பருவமடைந்ததைக் அறிந்து கொள்ளலாம். பருவம் வந்த பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டிற்குள் விட வேண்டும். கூண்டில் விட்ட ஓரிரு நிமிடங்களில் இனச்சேர்க்கை நடந்து விடும். பிறகு, பெண் முயலை அதனுடைய கூண்டில் விட்டுவிட வேண்டும்.

இன விருத்திக்காக ஆணுடன், பெண் முயலைச் சேர்க்கும்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.

இனப்பெருக்கத்திற்கு சேர்த்த 15 நாட்களுக்கு பிறகு பெண் முயலின் அடி வயிற்றைத் தடவிப் பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றிவிட வேண்டும். குட்டி உருவாகவில்லை எனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

சினப்பெருக்க காலம்

குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார் கழிவுகளை வைக்க வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள் ஆகும். ஆண்டிற்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகிவிடும். அடுத்தப் பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம். முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரை கிடைக்கும்.

அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் 5 முதல் 9 குட்டிகள் வரை கிடைக்கும்.

குட்டிகள் பராமரிப்பு

பிறந்த குட்டியின் எடை 60 கிராம் வரை இருக்கும். குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்துவிட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும்.

பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டி 750 கிராம் அளவிற்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்பொழுது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவிற்கு எடை வந்துவிடும்.

பராமரிக்கும் முறைகள்

முயல் கூண்டுகள், கூடாரங்கள், உபகரணங்கள், உணவு, தண்ணீர் எந்தவிதமான தொற்று இல்லாமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

முயல்கள் அதனுடைய கழிவுகள் மேல் படாதவாறு, உடனடியாக அகற்றி விட வேண்டும்.

சீரான காற்றோட்ட வசதியை ஏற்படுத்த வேண்டும். அதிகளவு முயல்களை கூண்டில் அடைக்க கூடாது.

முயலுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுகுவதே நல்லது.

விற்பனை

ஒவ்வொரு முயலும் சராசரியாக வருடத்திற்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியா 5 குட்டிகள் வீதம், ஒரு யூனிட்டில் உள்ள ஏழு பெண் முயல்கள் மூலம் வருடத்திற்கு 210 குட்டிகள் கிடைக்கும். நான்கு மாதத்தில் சராசரியாக இரண்டு கிலோ வரை எடை வரும்.

சினை முயலாக விற்றால், ஒரு முயல் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகும். சோதனைக் கூடங்களுக்கு விற்றால், ஒரு முயலை 1,500 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யலாம்.

இதன் ருசியை அறிந்த பகுதியில் இதனை விற்றால் நல்ல லாபம் பெறலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow