பார்வோ எனும் நாய்க் குட்டிகளின் எமன்

Canine parvo virus 2

 0  94
பார்வோ எனும் நாய்க் குட்டிகளின் எமன்

உலகெங்கிலும் நாய்களில் குறிப்பாக நாய்க் குட்டிகளில் parvo viral gastroenteritis என்னும் இரத்தக் கழிச்சல் நோய் அதிகளவு உயிரிழப்பை வருடாந்தம் ஏற்படுத்துகிறது. இலத்தீன் மொழியில் பார்வோ என்றால் மிக நுண்ணிய என்று பொருள். 20 நானோ மீட்டர் அளவேயான மிக மிகச் சிறிய DNA வைரசான பார்வோ [ Canine parvo virus 2- CPV2 ] ஆறு வாரம் முதல் ஆறு மாதம் வரையான வயதுடைய நாய்க் குட்டிகளை அதிகமாகத் தாக்கும் அதேவேளை நடைமுறையில் ஆறு வாரத்துக்கும் குறைவான மற்றும்  ஆறு மாதத்துக்கு மேற்பட்ட நாய்களையும் பாதிப்பதை அவதானிக்க முடிகிறது. முறையான தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்தாத  நாய்க் குட்டிகள் பார்வோ தொற்றுக்கு உள்ளாகுவதோடு நோய் வந்த பின் முறையான சிகிச்சை செய்யப்படாத மற்றும்  சிகிச்சைகள் பெறப்படாத  நாய்கள் அதிகளவு இறக்கின்றன.

பார்வோ வைரசின் வகைகள் தோன்றிய ஆண்டுகள்

1970 களில் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பூனைகளுக்கு ஏற்படும் Feline panleukopenia வைரசினை ஒத்த பார்வோ வைரஸ் நோய் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உலகெங்கிலும் பல இடங்களில் மரபணு ரீதியில் வேறுபட்ட பார்வோ நோய் நிலைகள் [variants]  அவதானிக்க பட்டிருந்தன.[ CPV2a,CPV2b,CPV2c]

இந்த நோயை பொறுத்த வரையில் இரண்டு வகைகள் உள்ளன

1.குடலினை / உணவு கால்வாய் தொகுதியை பாதிக்கும் வகை [ intestinal form]

2.இதயத்தை பாதிக்கும் வகை.[ Cardiac form]

குடலினை அல்லது உணவு கால்வாயை பாதிக்கும் வகைதான் பொதுவாக உலகெங்கிலும்  காணப்படுகிறது. நோய் தொற்றுடனான கழிவுகளை உண்ணும் நாய்களில் இந்த வைரஸ் தொற்றிக் கொள்வதுடன் தொண்டைப் பகுதியின் நிணநீர் கணுக்களில் பெருகி இரத்தத்தில் கலக்கிறது. நிணநீர் கணுக்கள்,என்பு மச்சை மற்றும் மிக விரைவாக பிரிவடையும் சிறுகுடல் பகுதிகளிலும்  இந்த வைரஸ் தாக்குகிறது. சிறுகுடல் பகுதியில் காயங்கள் ஏற்படுவதுடன்  வாந்தி வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகளும் தோன்றுகின்றன. என்பு மச்சை  பாதிப்படைவதால் குருதி அணுக்களின் உற்பத்தியும் பாதிப்படைகிறது.

குடற்பகுதியில் வைரஸ் கிருமிகள்

காயங்கள் மற்றும் குருதி அணுக்களின் அளவு குறைவதால் காற்று மற்றும் காற்றின்றி வாழும் நுண்ணுயிர்களும் பெருகி நிலையை மோசமாக்குகின்றன. தொடர்ச்சியான அதிகளவு வாந்தி வயிற்றோட்டம் காரணமாக  நீர் இழப்பு dehydration/ hypovolemic shock] ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது. அதிக புரத [ hypo protenemia] மற்றும் எரி சக்தி [hypo glycaemia]இழப்பும் ஏற்படுகிறது.

இதயத்தை பாதிக்கும் நோய்த் தொற்று மிக குறைவாகவே அவதானிக்க படுகிறது. தாயின் கருப்பையில் இருந்து இந்த தொற்று ஏற்படுகிறது.பிறந்தது முதல் எட்டு வாரங்களில் இந்த நிலை ஏற்படுகிறது. மிக விரைவாக பிரிகையடையும் இதய தசைகள் பாதிக்கப்பட்டு [heart failure] குட்டிகள் இறக்கின்றன.

இதயம் மற்றும் உணவு கால்வாய் தொகுதி பாதிக்கப் படும்

இலங்கையை பொறுத்த வரை விட்டு விட்டு பெய்யும் மழைக் காலங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கில் ஏப்ரல்,மே யூன் யூலை மாதங்களிலிந்த நோயின் தாக்கத்தை அவதானிக்க முடிகிறது. எனது அனுபவத்தின் அடிப்படையில் நான் எனது சிகிச்சை ஆயத்தங்களை இந்த காலப் பகுதில் செய்து வருகிறேன். நாட்டின் ஏனைய பகுதிகளில் வருடத்தின்  ஆரம்பத்திலேயே இந்த நோய் நிலையை அதாவது ஜனவரி பெப்ரவரி மார்ச் மாதங்களில்  அவதானிக்க முடிகிறது. அண்மைய நாட்களில் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு நாய்க் குட்டிகளை அதிகளவில் கொண்டுவந்து பலர் விற்பதால் இந்த நோய்  மிக விரைவாக காலம் கடந்தும் பரவலடைகிறது.

இந்த நோய் பொதுவாக ரொட்வைலர்[ Rottweiler]  ,லப்ரடோர் [ Labrador] கோல்டன் ரெட்ரேவர்[ Golden retriever ]   டோபர்மான் [ Doberman] ஜேர்மன் செப்பெர்ட் [ German Shepard] போன்ற வெளிநாட்டு இன நாய்களையே அதிகளவு பாதிக்கின்ற அதேவேளை அண்மைக் காலமாக நாட்டு இன நாய்களையும்இந்த நோய்  பாதிப்பதை காண முடிகிறது.நோய் ஏற்படும் காலத்தில் தடுப்பூசி செலுத்தப்படாத குறித்த வயது பருவத்துக்குள் வரும் நாய்கள் பார்வோ ஆபத்தை எதிர் கொள்கின்றன. நான் மேலே சொன்ன உயர் வகை வெளிநாட்டு நாய்களை சிகிச்சையளிப்பது மிக மிகக் கடினம். அவை தப்பும் விகிதமும் மிக மிகக் குறைவு. ஓரளவு வயதான உள்ளூர் நாய்க் குட்டிகள் சிகிச்சையின் பின் சரியாகின்றன.அவற்றின் குணமடையும் விகிதம் மிக அதிகம். நான் முன்பு கூறியது போல பெரும்பாலும் சிறிய நாய்களை பாதிக்கின்ற இந்த நோயில் நோய் பாதித்த சிறிய நாய்களுடன் இருக்கும் தடுப்பூசி போடப்படாத பெரிய நாய்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வைரஸ் வகை,  நாயின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஏனைய சமாந்தரமான நோய்கள் [ உண்ணிக் காய்ச்சல் ] காரணிகளின் அடிப்படையில் இந்த நோயின் தீவிரத் தன்மை வேறுபடுகிறது. இந்த நோய் நாய்களை மட்டுமின்றி நரி ஓநாய்களையும் பாதிக்கின்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow