கால்நடை பராமரிப்பு – தேனீ வளர்ப்பு முறை

 0  19
கால்நடை பராமரிப்பு – தேனீ வளர்ப்பு முறை

தேனீ வளர்ப்பு முறையில் இரு வகையான வளர்ப்பு முறைகள் உள்ளன. ஒன்று விவசாய ரீதியில் தேனீ வளர்ப்பு, மற்றொன்று வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பு ஆகும்.

விவசாய ரீதியாக வளர்க்கும்போது, இந்தியத் தேனீக்களை மட்டும்தான் வளர்க்க முடியும். இவை, அயல் மகரந்த சேர்க்கைக்கு உகந்தவை. இந்தத்தேனீப் பெட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தோட்டத்தில் ஆங்காங்கு வைத்துவிட வேண்டும். இவற்றை இடம் மாற்றக்கூடாது. இம்முறையில், கிடைக்கும் தேனின் அளவு குறைவாக இருக்கும். ஆனால், அயல் மகரந்தச் சேர்க்கை, நன்றாக நடப்பதால் வயலில் உள்ள பயிர்களில் மகசூல் கூடும்.

வியாபார ரீதியில் அதாவது, தேன் உற்பத்திக்காக வளர்க்க, இத்தாலியத் தேனீக்கள் சிறந்தவை. இவற்றை அடிக்கடி இடம் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். இவை, அதிக அளவில் உண்ணக்கூடியவை. அதனால், பூக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இவை வாழும்.

தேனீக்களின் வகைகள்

மலை தேனீ – இவை சிறந்த தேன் சேகரிக்கும் வகைகள். சராசரியாக, ஒரு காலனிக்கு 50-80 கிலோ தேன் கிடைக்கும்.

சிறு தேனீ – இவை ஒரு காலனியில், 200 – 900 கிராம் தேனை சேகரிக்கும்.

இந்தியத் தேனீ – இவை சராசரியாக தேனை சேகரிக்கும் வகை. ஒரு வருடத்தில், தலா ஒரு காலனியில், 6 – 8 கிலோ தேனை சேகரிக்கும்.

ஐரோப்பா தேனீ – சராசரியாக ஒரு காலனிக்கு 25 – 40 கிலோ தேனை சேகரிக்கும்.

கொடுக்கற்ற தேனீ – கேரளாவில் காணப்படும் இத்தேனீக்களுக்கு கொடுக்குகள் சரியான முறையில் வளர்ந்து இருக்காது. மகரந்த சேர்க்கையில் அதிக திறன் கொண்டவைகள். இவைகள் ஒரு வருடத்திற்கு, 300-400 கிராம் தேனை சேகரிக்கும் தன்மை கொண்டவை.

தேன்கூடுகளை நிறுவும் முறைகள்

தேர்வு செய்யும் இடமானது நல்ல வடிகால் வசதியையுடைய திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டம் மற்றும் பூந்தோட்டத்திற்கு அருகாமையிலும் இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.

பெட்டியின் மேற்புறத்தில் பாலிதீன் பையைக் கொண்டு கட்டிவிட வேண்டும். இது பெட்டிக்கு நிழலைத் தருவதோடு, மழையிலிருந்தும் பாதுகாக்கும். ஒவ்வொரு பெட்டிக்குமான இடைவெளி 5 முதல் 6 அடி இருக்க வேண்டும்.

தேனீக்களின் காலனிகளை, கால்நடைகள், ஏனைய விலங்குகள், பரபரப்பான வீதிகள் மற்றும் தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில் அமைக்க வேண்டும்.

பல்லி, ஓணான், கதண்டு, சிலந்தி ஆகியவை தேனீக்களின் முக்கிய எதிரிகள். இவை பெட்டிக்குள் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேன் பெட்டியை தண்ணீருள்ள சிறு பாத்திரத்தில் நனையுமாறு அமைத்தால் எறும்பு அண்டாது.

வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின் காலனிகளை, கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு தேன் கூட்டை அமைக்க வேண்டும்.

தேன் காலனிகளை அமைக்கும் முறை

தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களை மாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்ய வேண்டும்.

இராணீ தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால், இது ஏனைய தேனீக்களை கவர்ந்து இழுக்கும்.

பெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோ அல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானது தேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும்.

சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்து தேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள், வேகமாக கூட்டினை கட்ட இயலும்.

பராமரிப்பு முறைகள்

பெட்டிகளை நன்கு செழிப்பான இடத்தில் அமைக்க வேண்டும். பெட்டிகளை இடம் மாற்ற விரும்பினால் இரவு நேரத்தில் மட்டுமே மாற்ற வேண்டும்.

எறும்பு மற்றும் மற்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.

தினமும் தேன் பெட்டியை கண்காணிக்க வேண்டும். அறுவடையை சரியான சமயம் அறிந்து செய்ய வேண்டும்.

அறுவடை

எந்த பகுதிகள் அறுவடைக்கு தயாரோ, அந்த பகுதிகளுக்கு புகையை அடித்து, தேனீக்களை விரட்டி அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக, இரண்டு முக்கிய பூக்கும் காலங்களான அக்டோபர் – நவம்பர் மற்றும் பிப்ரவரி – ஜூன் மாதங்களிலும், அதற்கு சற்றே பின்பு வரும் மாதங்களிலும் அறுவடை செய்யலாம். அறுவடைக்கு தயாரான கூடுகள், வெளிர் நிறத்தில் தேன் நிரப்பப்பட்டு இருக்கும். பாதிக்கும் மேல் அறைகள் மெழுகினால் மூடப்பட்டு இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow