மண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா?
மண் பரிசோதனை :- மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும். கார அமில தன்மையை கண்டறியவும் மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மையை மாற்றுங்கள்.
மண் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்?
- உரச்செலவைக் குறைந்து அதிக மகசூல் பெற்றிட
- மண்ணில் உள்ள கார, அமிலத்தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திட தழை உரம், தொழு உரம், ஜிப்சம், சுண்ணாம்பு இவற்றின் அளவை அறிந்து இடவும்
- மண்ணின் உவர்த்தன்மைகளை அறிந்து வடிகால் வசதியைப் பெருக்குதல். உப்பைத்தாங்கி வளரும் சூர்யகாந்தி, பருத்தி மிளகாய்ப் பயிர்களைச் சாகுபடி செய்தல்.
- மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும்.
- பயிர்களுக்குத் தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிடவும்.
- தேவைக்கேற்கு உரமிடுவதால் உரச்செலவை குறைக்கவும்.
- இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைத்திடவும்.
- அங்ககச்சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும்.
- மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்கவும் மண் பரிசோதனை அவசியம்.
மண்ணின் மாறுபட்ட தன்மைகளால் ஏற்படும் விளைவுகள்
- மண்ணில் களர்த்தன்மை (பி.எச்.8.5க்கு மேல்) அதிகரித்தால், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும்.
- உவர்த்தன்மை (ஈசி 3.0க்கு மேல்) அதிகரித்தாலும், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும்.
- தழைச்சத்து, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. அளவு அதிகமானால், பயிர் அதிகம் வளர்ந்து பூச்சி நோய்த் தாக்குதலுக்கு உட்படுகிறது. மகசூல் பாதிக்கப்படும்.
- மணிச்சத்து, பயிரில் மணிகள் முதிர்ச்சி அடையும், வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல் மண்ணில் வீணாகிறது.
- சாம்பல்சத்து பயிரில் பூச்சிநோய்கள் வராமல் காக்கிறது. வறட்சியைத் தாங்க உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல், மண்ணில் வீணாகிறது.
மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள்
- மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
- அதிக பட்சமாக 5 எக்டேருககு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் எக்டேருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும்
மண்மாதிரிகள் சேகரிக்க வேண்டிய காலம்
- நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
- உரமிட்டடவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி தேவை
- பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது
மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை
- மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
- மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில் எழுத்து “V” போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ. பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.

மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை

“V” போல் மண்வெட்டியால் எடுத்தல் - இவ்வாறாக குறைநத பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.
- நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குறுப்பி மூலம் தான் மண் மாதிரிகள் எடுத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது.
- பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 12 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.
- வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும். இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 1/2 கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.

சேகரித்த மண்

நன்றாக கலக்கி விடுதல்

நான்காக பிரித்தல்

எதிர் பகுதியை நீக்கிவிடுதல் - சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக் கூடாது.

பைகளில் சேகரித்தல்

விவரங்கள் குறிப்பிடப்பட்ட சேகரித்த மண்
| பயிர் வகை | மண் மாதிரி எடுக்கும் ஆழம் (செ.மீ.) |
|---|---|
| புல் மற்றும் புல் வெளி | 5 செ.மீ ஆழத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும். |
| நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறு தானிய பயிர்கள் (சல்லி வேர் பயிர்கள்) | 15 செ.மீ ஆழத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும். |
| பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் (ஆணி வேர் பயிர்கள்) | 22 செ.மீ ஆழத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும். |
| நிரந்தர பயிர்கள், மலைப் பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள் | 30, 60, 90 செ.மீ. ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும் |
மண் மாதிரிகளை ஆய்வு செய்யும் இடம்
வேளாண்துறை மண் பரிசோதனை நிலையம் (அ) இப்கோவின் நடமாடும் மண் ஆய்வகம் (அ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அமைந்த ஆய்வு கூடங்களின் மூலம் மண் மாதிரிகளை ஆய்வு செய்து பயன்பெறவும்.
மண் பரிசோதனை ஆய்வகங்கள்