திருக்குறள் - குறள் 9

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.


திருக்குறள் - குறள் 9


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

மு.வரதராசனார் உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

சாலமன் பாப்பையா உரை:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

பரிமேலழகர் உரை:
கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உண


மணக்குடவர் உரை:
அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப்  போல அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுத்தலுடையான் அல்லவாம்.

Translation:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead.

Explanation:
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்