திருக்குறள் - குறள் 8
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
திருக்குறள் - குறள் 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
மு.வரதராசனார் உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
பரிமேலழகர் உரை:
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனை
மணக்குடவர் உரை:
அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெய்வத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக்குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும்.
Translation:
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard
the further bank of being's changeful sea to attain.
Explanation:
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்