திருக்குறள் - குறள் 647
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: சொல்வன்மை.

திருக்குறள் - குறள் 647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.
மு.வரதராசனார் உரை:
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.
பரிமேலழகர் உரை:
சொலல் வல்லன் - தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன் - அவை மிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய்; அஞ்சான் - அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது - அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரி
மணக்குடவர் உரை:
ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தான் எண்ணியவற்றைப் பிறர்க்குச் சொல்லுவதில் வல்லவனாகி, சொல்லுவதில் சோர்வில்லாதவனாகி, அவைக்கு அஞ்சாதவன் எவனோ அவனை மாறுபாட்டினால் வெல்லுதல் யாவர்க்கும் அரிதாகும்.
Translation:
Mighty in word, of unforgetful mind, of fearless speech,
'Tis hard for hostile power such man to overreach.
Explanation:
It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்