திருக்குறள் - குறள் 646

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: சொல்வன்மை.


திருக்குறள் - குறள் 646


வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

மு.வரதராசனார் உரை:
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.

பரிமேலழகர் உரை:
வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொற்பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு. (பிறர் சொ


மணக்குடவர் உரை:
தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிறர்க்குத் தாம் சொல்லும்போது, அவர் கேட்பதற்கு விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லும்போது அச்சொல்லின் பயனைக் கொண்டறிதல் குற்றம் அற்றவரது துணிவாகும்.

Translation:
Charming each hearer's ear, of others' words to seize the sense,
Is method wise of men of spotless excellence.

Explanation:
It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்