திருக்குறள் - குறள் 59

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.


திருக்குறள் - குறள் 59


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

மு.வரதராசனார் உரை:
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

பரிமேலழகர் உரை:
புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உட


மணக்குடவர் உரை:
புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
புகழ்வதற்குரிய மனையாளைப் பெறாத இல்வாழ்வார்களுக்குத் தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஆண்சிங்கம் போன்ற பெருமிதமான நடை இல்லை.

Translation:
Who have not spouses that in virtue's praise delight,
They lion-like can never walk in scorner's sight.

Explanation:
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்