திருக்குறள் - குறள் 373

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: ஊழியல். அதிகாரம்: ஊழ்.


திருக்குறள் - குறள் 373


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

மு.வரதராசனார் உரை:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

சாலமன் பாப்பையா உரை:
பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).

பரிமேலழகர் உரை:
நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது.


மணக்குடவர் உரை:
நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும். மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவனுக்குப் பின்னும் தன் ஊழாலாகிய பேதைமை (அறியாமை) அறவே மேற்பட்டு நிற்கும்.

Translation:
In subtle learning manifold though versed man be,
'The wisdom, truly his, will gain supremacy.

Explanation:
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்