திருக்குறள் - குறள் 30

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை.


திருக்குறள் - குறள் 30


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

மு.வரதராசனார் உரை:
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

பரிமேலழகர் உரை:
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெய


மணக்குடவர் உரை:
எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எல்லா உயிர்களிடத்திலும் அருளுடன் நடந்துகொள்ளுவதால் அந்தணர் என்று சொல்லவப்படுபவர் அறவோர்களாகிய முனிவர்களே யாவார்கள்.

Translation:
Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue's sons the name of 'Anthanar' men give,

Explanation:
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்