திருக்குறள் - குறள் 29

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை.


திருக்குறள் - குறள் 29


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

மு.வரதராசனார் உரை:
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

பரிமேலழகர் உரை:
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; 'கணம் ஏயும்' காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது. (சலியாமையும், பெருமையும


மணக்குடவர் உரை:
குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உயர்ந்த குணமென்னும் குன்றின்மேல் நின்ற முனிவர்களுடைய கோபம், இருப்பது கணநேரமேயானாலும் கோபிக்கப்பட்டவர்களால் அக்கோபம் தடுப்பதற்கு முடியாததாகும்.

Translation:
The wrath 'tis hard e'en for an instant to endure,
Of those who virtue's hill have scaled, and stand secure.

Explanation:
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்