திருக்குறள் - குறள் 261
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: தவம்.

திருக்குறள் - குறள் 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம் என்று கூறப்படும்.
மு.வரதராசனார் உரை:
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல்,ப
மணக்குடவர் உரை:
தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தவத்திற்கு வடிவம் என்னவென்றால், தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுவதும், தாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பதுவுமேயாகும்.
Translation:
To bear due penitential pains, while no offense
He causes others, is the type of 'penitence'.
Explanation:
The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்