திருக்குறள் - குறள் 198

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பயனில சொல்லாமை.


திருக்குறள் - குறள் 198


அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.

மு.வரதராசனார் உரை:
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

பரிமேலழகர் உரை:
அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது


மணக்குடவர் உரை:
அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அறிதற்கரிய நற்பயன்களை ஆய்ந்தறியும் அறிவுடையவர்கள், மிக்க பயனில்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.

Translation:
The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.

Explanation:
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்