திருக்குறள் - குறள் 193
- குறள் பால்:
- அறத்துப்பால்
- குறள் இயல்:
- இல்லறவியல்
- அதிகாரம்:
- பயனில சொல்லாமை
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
திருக்குறள் - குறள் 193 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
மு.வரதராசனார் உரை
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
பரிமேலழகர் உரை
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.).
மணக்குடவர் உரை
நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை
பயனொன்றும் இல்லாதவற்றை ஒருவன் விரிவுப்படுத்தி உரைக்கின்ற உரையானது அவன் நீதி இல்லாதவன் என்பதனைச் சொல்லிக் காட்டும்.
Translation
Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.
Explanation
That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue".
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 20: பயனில சொல்லாமை
குறள் 191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
குறள் 192 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.
குறள் 194 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து.
குறள் 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.
குறள் 196 பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல்.
குறள் 197 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.
குறள் 198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
குறள் 199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.
குறள் 200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.