திருக்குறள் - குறள் 1265

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: அவர்வயின்விதும்பல்.


திருக்குறள் - குறள் 1265


காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

மு.வரதராசனார் உரை:
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.

பரிமேலழகர் உரை:
(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும்


மணக்குடவர் உரை:
என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எனது கண்களில் ஆவல் தீரும் வகையில் எனது கொண்களைக் காண்பேனாக; அங்ஙனம் கண்டபின் மெல்லிய தோளிலே உள்ள பசப்பு தானாகவே நீங்கும்.

Translation:
O let me see my spouse again and sate these longing eyes!
That instant from my wasted frame all pallor flies.

Explanation:
May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்