திருக்குறள் - குறள் 1261

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: அவர்வயின்விதும்பல்.


திருக்குறள் - குறள் 1261


வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

மு.வரதராசனார் உரை:
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.

பரிமேலழகர் உரை:
[அஃதாவது , சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விரைதல் . தலைமகற் பிரிவும் தலைமகள் ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார்.(தலைமகள் காண்டல் விதுப்பினால் ச


மணக்குடவர் உரை:
கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன. இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அவர் நம்மைப் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் இழைத்து வைத்து அவைகளைத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்தன. அவர் வருகின்ற வழிபார்த்து எனது கண்களும் ஒளியிழந்து போயின.

Translation:
By My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
With nothing on the wall the days since I was left forlorn.

Explanation:
My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்