திருக்குறள் - குறள் 1262

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: அவர்வயின்விதும்பல்.


திருக்குறள் - குறள் 1262


இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

மு.வரதராசனார் உரை:
தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.

பரிமேலழகர் உரை:
(ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என


மணக்குடவர் உரை:
இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின் பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும். இலங்கிழாய் என்றவதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
விளங்குகின்ற அணிகலன்களையுடையவளே, இன்று காதலரை யான் மறப்பேனாயின் மேலும் அழகு என்னை விட்டு நீங்க என் தோள்வளையல்கள் கழலும்.

Translation:
O thou with gleaming jewels decked, could I forget for this one day,
Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.

Explanation:
O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்