திருக்குறள் - குறள் 1263
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: அவர்வயின்விதும்பல்.
திருக்குறள் - குறள் 1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.
மு.வரதராசனார் உரை:
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.
சாலமன் பாப்பையா உரை:
என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன். ('உரன்' என்பத
மணக்குடவர் உரை:
இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன். இஃது அவர் வாராரென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இன்பம் நுகர்தலை விரும்பாமல் வேறு ஒன்றனை விரும்பித் தமது மனவெழுச்சியாகிய ஊக்கமே துணையாகச் சென்றவர் அவற்றை இகழ்ந்து இங்கு வருதலை விரும்புவதால் யாம் இன்னும் உயிரோடிருக்கிறோம்.
Translation:
On victory intent, His mind sole company he went;
And I yet life sustain! And long to see his face again!.
Explanation:
still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்