திருக்குறள் - குறள் 1186

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பசப்புறுபருவரல்.


திருக்குறள் - குறள் 1186


விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.

மு.வரதராசனார் உரை:
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

சாலமன் பாப்பையா உரை:
விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பி


மணக்குடவர் உரை:
விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு. இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
விளக்கினுடைய மெலிவு பார்த்து நெருங்கி வருகின்ற இருட்டினைப் போன்று தலைவரது முயக்கத்தின் தளர்ச்சியினைப் பார்த்து இப்பசப்பு நிறம் நெருங்கி வருவதாயிற்று.

Translation:
As darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord's embrace.

Explanation:
Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்