திருக்குறள் - குறள் 1185

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பசப்புறுபருவரல்.


திருக்குறள் - குறள் 1185


உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.

மு.வரதராசனார் உரை:
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

சாலமன் பாப்பையா உரை:
முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?.

பரிமேலழகர் உரை:
(காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ?


மணக்குடவர் உரை:
எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய். இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அந்தக் காலத்தில் எமது காதலர் பிரிந்து சென்றார். என்மேனி பசப்பு நிறம் அடைவது இங்கேயன்றோ?.

Translation:
My lover there went forth to roam;
This pallor of my frame usurps his place at home.

Explanation:
Just as my lover departed then, did not sallowness spread here on my person ?.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்