திருக்குறள் - குறள் 1187
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பசப்புறுபருவரல்.

திருக்குறள் - குறள் 1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!.
மு.வரதராசனார் உரை:
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.
சாலமன் பாப்பையா உரை:
முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது. ('கொள்வது' என்பது குறைந்து
மணக்குடவர் உரை:
முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை. இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முன்னர் ஒருபோது காதலரைத் தழுவிக் கிடந்தேன். அறியாமல் சிறிது விலகிவிட்டேன். விலகிய அந்தப் பொழுதிலேயே பசப்பு நிறம் அள்ளிக் கொள்ளப்படுகின்ற பொருளினைப் போல வந்து நிறைந்துவிட்டது.
Translation:
I lay in his embrace, I turned unwittingly;
Forthwith this hue, as you might grasp it, came on me.
Explanation:
I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்