திருக்குறள் - குறள் 1144

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: அலரறிவுறுத்தல்.


திருக்குறள் - குறள் 1144


கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.

மு.வரதராசனார் உரை:
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது) காமம் கவ்வையால் கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும். (அலர்தல்: மேன்மேல் மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போல


மணக்குடவர் உரை:
அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்; அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும். செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என்னுடைய காமம் இவ்வூரார் எடுக்கின்ற அலரினாலே அலர்தலையுடையதாக இருக்கின்றது. அந்த அலர் இல்லாவிட்டால் காமம் தனது இயல்பு குறைந்து சுருங்கிவிடும்.

Translation:
The rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise.

Explanation:
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்