கால்நடை பராமரிப்பு – வான்கோழி வளர்ப்பு

வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்க்கலாம். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய சமைத்த உணவு, சமையல் அறைக் கழிவுகள் ஆகியவற்றை வான்கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

 0  501
கால்நடை பராமரிப்பு – வான்கோழி வளர்ப்பு

இரகங்கள்

அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி, பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை வான்கோழி ஆகிய இரகங்கள் உள்ளன.

வீட்டு மேலாண்மை
வான்கோழிகளை வளர்த்திட 4 வளர்ப்பு முறைகள் உள்ளன.
 

  • புறக்கடை வளர்ப்பு(Backyard system)
  • மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு (Semi-intensive system)
  • ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு(Deeplitter rearing)
  • கம்பி வலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்(Slate floor rearing)

புறக்கடை வளர்ப்பு
வீட்டைச்சுற்றி 5 செண்ட் நிலம் இருந்தால் அது ஒரு ஜோடிக்கு போதுமானதாக இருக்கும். இரவு நேரத்தில் அடைத்து வைத்திட ஒரு சிறிய அறை அல்லது பெரிய கூடைகள் தேவைப்படும். முட்டையிட ஒரு சிறிய இருட்டான இடம் தேவைப்படும்.

வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்க்கலாம். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய சமைத்த உணவு, சமையல் அறைக் கழிவுகள் ஆகியவற்றை வான்கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு

வியாபார முறையில் வான்கோழிப் பண்ணை அமைத்திட மேய்ச்சலுடன் கொட்டகை கட்டி வளர்க்கும் முறை, புறக்கடை முறையைவிடச் சிறந்ததாகும். ஒரு ஆண் வான்கோழிக்கு, கொட்டகையில் 5-6 சதுர அடியும், ஒரு பெட்டை வான்கோழிக்குச் சுமார் 4 அடி இடவசதியும் தேவைப்படும். இந்தக் கொட்டகையில் நெல் உமி அல்லது கடலைத் தோல் போட்டு, ஆழ்கூளம் அமைக்க வேண்டும். சுமார் 100 வான்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்திட 20 ஆண் வான்கோழிகள் தேவை. இதற்காகச் சுமார் 20 அடி அகலம், 25 அடி நீளம் கொண்ட ஒரு கொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு

கோழிகளை வளர்ப்பது போல் வான்கோழிகளையும் ஆழ்கூளமுறையில் கொட்டகையில் வளர்க்கலாம். ஆழ்கூளம் அமைப்பதற்கு நெல்உமி அல்லது கடலைத் தோல் ஆகியவற்றை சிமெண்ட் தரையின் மீது ஆறு அங்குலத்திற்கு பரப்பவேண்டும். இம்முறையில் வான்கோழிகளை வியாபார நோக்கில் வளர்க்க வேண்டுமானால் குறைந்தது 200 வான் கோழிகள் கொண்ட பண்ணையை அமைக்கவேண்டும். இம்முறையில் 40 ஆண் வான்கோழிகளுக்கு, 160 பெட்டை வான்கோழிகள் என்ற விகிதத்தில் வளர்க்கலாம். ஒரு சேவல் வான்கோழிக்கு சுமார் 5-6 சதுர அடியும் ஒரு பெட்டை வான்கோழிக்குச் சுமார் 4 சதுர இடவசதியும் தேவைப்படும். 40 ஆண் கோழிகளுக்கு 200 முதல் 240 சதுர இடவசதியும் 160 பெட்டை வான்கோழிகளுக்கு 640 சதுர இடவசதியும் தேவைப்படும். வளர்ந்த வான்கோழிகள் வளர்ப்பதற்கு தனிக் கொட்டகையும் குஞ்சுகள் வளர்ப்பதற்கு தனிக்கொட்டகையும் அமைத்திடவேண்டும்.

கம்பி வலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்

அதிகமாக மழைப்பெய்யும் இடங்களிலும், ஆழ்கூளம் காய்ந்த நிலையில் வைக்க முடியாத இடங்களிலும் கம்பிவலைச் சட்டங்களைப் பொருத்தி அதன் மேல் வான்கோழிகளை வளர்க்கலாம். இதற்கான கொட்டகையினை அமைப்பதை ஆழ் கூளமுறை போன்றே கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் சிமெண்ட் காங்கிரிட் கொண்ட தரை அமைக்க வேண்டிய அவசியமில்லை. பக்கவாட்டுச் சுவர், கம்பிவலைச் சட்டத்திற்கு மேல் 11/2 அடி உயரத்திற்கு அமைத்துக் கொள்ள வேண்டும். சட்டமானது ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் இடைவெளி கொண்ட கம்பி வலையினை 2 அடிக்கு 2 அடி மரச்சட்டங்களை அமைத்துக் கொண்டு அதன்மேல் பொருத்திவிட வேண்டும். இந்தக் கம்பி வலைச் சட்டங்களை மண் தரைமீது ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து விடலாம். அவற்றின் மீது வளர்ந்த வான்கோழிகளை வளர்த்திடலாம். சிறிய குஞ்சுகளை, கம்பி வலைச் சட்டத்தின் மீது வளர்க்க வேண்டுமானால் ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் கொண்ட கம்பி வலையை மரச்சட்டம் மீது பொருத்திக் கொள்ளலாம். கம்பிவலைச் சட்டத்தின் மேல் விட்டு வான்கோழிகளை வளர்த்தால் பலவிதமான நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளித்திடலாம்.

தீவன மேலாண்மை
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தானியங்கள், கீரைகள், களைகள் போதுமான அளவு கிடைத்து விடும். ஆனால் புரதச்சத்து தேவை நிறைவு பெறாது. இதை ஈடுகட்ட கடலைப் பிண்ணாக்கு / எள்ளுப் பிண்ணாக்கு / சூரியகாந்திப் பிண்ணாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தண்ணீரில் ஊறவைத்து இத்துடன் சிறிதளவு தவிடு வகையினைச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரே சமயத்தில் அதிகமாக வைக்காமல் சிறிது சிறிதாகத் தீவனம் வைக்க வேண்டும். தண்ணீரில் ஊற வைத்து ஒரிரு நாட்கள் கழித்து அக்கலவையினை தீவனமாகப் பயன்படுத்தக் கூடாது. பழைய, ஊற வைத்த பிண்ணாக்கில் பூஞ்சைக் காளான் வளர்ச்சி ஏற்படுவதால் வான்கோழிகளுக்கு இது தீங்களிக்கும்.


மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு முறையில் கொட்டகையைச் சுற்றிச் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு கம்பிவலை கட்டப்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விடலாம். புல் பூண்டுகள், களைகளை ஒரிரு நாட்களில் தின்று விடும். பசுந்தீவனமாக அருகம்புல் போடலாம். கலப்புத் தீவனம் இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அளிக்க வேண்டும்.

மற்ற முறைகளில் தீவனத்தை குறிப்பிட்ட நேர இடைவெளியில் கொடுக்க வேண்டும். தண்ணீர் மற்றும் தீவனம் ஆகியவற்றை காலை மற்றும் மாலை நேரங்களில் வைக்க வேண்டும்.

இனப்பெருக்க மேலாண்மை
முட்டையிடும் பருவம்


வான்கோழி தினமும் முட்டை வைக்காது. 36 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் முட்டை வைக்கும். 7-8 மாதங்களில் முட்டை இட ஆரம்பிக்கும்.

முட்டை அடைவைப்பு முறை

வான்கோழிகள் பெரும்பாலும் சுயமாக முட்டைகளை அடைகாப்பது இல்லை. அடைகாக்கும் இயந்திரத்தின் மூலம் அல்லது நாட்டுக் கோழிகளைக் கொண்டு அடைகாக்கப்படுகிறது. முட்டைகளை மழை, பனிக்காலத்தில் 7 நாள் வரையிலும், காற்று இளவேனிற் காலத்தில் 6 நாள் வரையிலும், வெயில் காலத்தில் 4 நாள் வரையிலும் சேமித்துவைத்துப் பின் அடை வைக்க பயன்படுத்த வேண்டும். நாட்டுக் கோழிகளில் 7 முட்டை வரையிலும் அடை வைக்கலாம். 28 நாட்கள் அடைகாக்கும் பருவம் ஆகும்.

குஞ்சு பருவம் வளர்ப்பு முறை

வான்கோழி வளர்ப்பில் மிக முக்கியமான காலகட்டம் ஒரு மாதம் வரை வளர்ப்பதாகும். பொரித்த குஞ்சுகளை முடி உலர்ந்த பின் செயற்கை வெப்பமாக புரூடர் அமைத்து புரதம் நிறைந்த தீவன உணவு கொடுக்க வேண்டும். குளூகோஸ் கலந்த குடிநீரை வைக்க வேண்டும். வறுகடலை தூள் செய்து உணவாக கொடுக்கலாம். அவித்த முட்டையின் வெண்கரு மட்டும் எல்லாவகை தானியங்களுடன் கலந்து கொடுக்கலாம். இதற்கென்று பிரத்யேகமாக குஞ்சு தீவனங்கள் உள்ளது. 20 நாட்களுக்குப் பின் பசுந்தீவனங்களைக் கொடுக்க வேண்டும்.

வான்கோழிகள் வளரும் பருவத்தில் பசுமையான இலைகளை விரும்பி உண்ண ஆரம்பிக்கும். குதிரைமசால், வேலிமசால், முயல்மசால், காசினி கீரை, அகத்தி, கேரட், கல்யாணி முருங்கை, சித்தகத்தி, அருகம்புல், பொடுதலை, கோரை புற்கள், காராமணி, சவுண்டல், கடலைக்கொடிகள், மல்பெரி முருங்கை, கீரை வகைகள், காய்கறி, பழங்கள் என இயற்கையாக கிடைப்பவைகளை உணவாகக் கொடுக்கலாம். மழைக்காலங்களில் தேங்கிய மழைநீர் மண் படிந்த இலைகளைக் கொடுக்கக்கூடாது.

சுகாதார மேலாண்மை
வான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்


அனைத்துத் தடுப்பூசிகளையும் உரிய காலத்தில் போடவேண்டும். தரமான குஞ்சுகளைச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்கவேண்டும். நோய் தாக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து, வான்கோழிக் குஞ்சுகளை வாங்கக்கூடாது.

வான்கோழிகளைப் பராமரிக்கும் இடம், தண்ணீர் தேங்காத பகுதியாக இருக்கவேண்டும். சுத்தமான தண்ணீர் மற்றும் தீவனத்தை அளிக்கவேண்டும்.

குடற்புழு நீக்க மருந்தை மாதம் ஒரு முறை கொடுப்பதன் மூலம் அக உண்ணிகளையும், தக்க மருந்து கலந்த நீரில் வான்கோழிகளை நனைத்து எடுப்பதன் மூலம் புற உண்ணிகளையும் கட்டுப்படுத்தவேண்டும்.

இறந்து போன வான்கோழிகளையோ, குஞ்சு பொரித்த முட்டைகளையோ உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடவேண்டும்.

நோய்களுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட ஆரம்பித்தாலோ அல்லது வான்கோழிகள் ஏதேனும் இறந்து விட்டாலோ, உடனே கால்நடை மருத்துவரை அணுகி இறந்த வான்கோழிகளை இரத்தபறிசோதனை செய்து எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மற்றக் கோழிகளுக்கு அந்நோய் பரவாத வண்ணம் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும்.

வான்கோழிகளை விற்பனை செய்தபின், ஒவ்வொரு முறையும் ஆழ்கூளம், எச்சம் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி பண்ணையை, கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்
தடுப்பூசி


இராணிக்கெட் நோய்க்கான லசோட்டா அல்லது ஆர்டிஎப் தடுப்பூசியை 2-7 நாட்களில் கண் அல்லது மூக்கில் இரண்டு சொட்டு விட வேண்டும். ஆர்டிவிகே என்னும் தடுப்பூசியை 8வது வாரத்தில், இறக்கையில் ஊசி மூலம் அளிக்கவேண்டும்.

அம்மை நோய்

அம்மை நோய்க்காக எப்பிவி என்னும் தடுப்பு மருந்தை இறக்கையில் ஊசி மூலம் 2-3 வது வார வயதில் கொடுக்கவேண்டும்.

தடுப்பு மருந்து

தீவனத்தில் ரத்த கழிச்சல் நோய்க்கான தடுப்பு மருந்தை 3வது வார வயதில் அளிக்க வேண்டும்.

விற்பனை

வான்கோழிகளை 12 முதல் 16 வார வயதில் விற்பனை செய்திட வேண்டும். 9 முதல் 12 வார வயதில் 3 கிலோ எடையும், 11 வார வயதில் 4 முதல் 5 கிலோ எடையும் இருக்க வேண்டும். இந்த வயதிற்கு பிறகு இறைச்சி முற்றி விடுவதால் உண்பதற்கு மிருதுவாக இருக்காது. ஆகவே வான்கோழிகளை 12 முதல் 16 வார வயதிற்குள் இறைச்சியாக இருக்கும் போது விற்பதும், வாங்குவதும் நல்லது.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow