லாபம் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் தான் லாபம்.

லாபம் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

காதல், ஆக்ஷன், திரில்லர், என பல திரைப்படங்கள் இதுவரை நம் தமிழ் திரையுலகில் வெளியாகியிருந்தாலும், பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை என சமூக கருத்துக்களை மக்களுக்கு பிடித்தவாறு படங்களாக கொடுத்து வந்தவர் எஸ்.பி. ஜனநாதன். இவர் நம் மண்ணைவிட்டு பிரிந்திருந்தாலும், என்றுமே நம் மனதை விட்டு பிரியாத அளவிற்கு சிறந்த படைப்புகளை நமக்கு கொடுத்துள்ளார். அப்படி அவருடைய இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் தான் லாபம். பல போராட்டம் மற்றும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..? இல்லையா..? பார்ப்போம்

கதைக்களம்

7 வருடத்திற்கு முன் தனது ஊரை விட்டு வெளியேற்றப்படும் பக்கிரி { விஜய் சேதுபதி }, 7 வருடம் கழித்து பல நாடுகள் சுற்றி, திரிந்து பல விஷயங்களை தெரிந்துகொண்டு மீண்டும் தனது ஊருக்கு திரும்புகிறார். விவசாயத்தின் மூலம் தனது ஊரை செழிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஊருக்கு வரும் பக்கிரி, தனது நண்பர்களுடன் சேர்ந்து, விவசாயிகளை காப்பாற்ற, நல்ல விஷயங்களை செய்ய முயற்சி எடுக்கிறார். அதற்காக மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க போராடுகிறார்.

ஆனால், மற்றொரு புறம் மக்களிடம் இருந்து உழைப்பை சுரண்டி எடுக்கும் வில்லனாக என்ட்ரி கொடுக்கிறார் ஜெகபதி பாபு. மக்களுக்கு நல்லது செய்வது போல் தன்னை காட்டுக்கொள்ளும் ஜெகபதி பாபு, மக்களுக்கு எதிரான பல விஷயங்களை மக்களுக்கே தெரியாமல் செய்து வருகிறார்.

மக்களிடம் இருந்து நம்பிக்கையை பெற போராடி வரும் விஜய் சேதுபதி பல வழிகளில் முயற்சி செய்கிறார். அதில் ஒரு வழியாக, நாடக கலைஞர்கள் மூலம் சொன்னால் மக்களுக்கு எளிதான வழியில் புரியும் என்று நாடக கலைஞர்களை வரவைக்கிறார். அதில், நாடக கலைஞராக, கிளாரா எனும் கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

முயற்சியின் மேல் முயற்சியாக செய்து மக்களின் நம்பிக்கையை பெரும் விஜய் சேதுபதி, மக்களின் தரிச நிலங்களில், கடுமையான உழைப்பினால் விவசாயம் செய்து, விவசாய நிலமாக மாற்றுகிறார். இதுவரை அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஜெகபதி பாபு, ஒரே அடியில் மக்களிடம் இருந்த விஜய் சேதுபதியின் செல்வாக்கை சரிகிறார். இதன்பின், எப்படி அதிலிருந்து விஜய் சேதுபதி மீண்டு வந்தார்..? மீண்டும் மக்களிடம் நம்பிக்கையை சம்பாதித்தாரா..? இல்லையா..? விவசாயம், விவசாயியின் நிலை என்னாவது..? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

பக்கிரி கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி மீண்டும் தமிழ் சினிமாவிற்கு, தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்துள்ளார். எந்த கதாபாத்திரத்திலும் அவர் ஒன்றிப்போகும் விதம் சிறப்பு.

மக்களிடம் இருந்து அவர்களின் உழைப்பையும், சொத்தையும் எப்படி திருடுவது என்று, ஜெகபதி பாபுவின் நடிப்பு எடுத்துக்காட்டியுள்ளது. கதாநாயகியாக வரும் ஸ்ருதி ஹாசனின் நடிப்பு கொஞ்சம் சுமார் தான்.

விஜய் சேதுபதியின் நண்பர்களாக நடித்திருந்த கலையரசன், டானியல் பாலாஜி, நிதிஷ் வீரா, ரமேஷ் திலக், ப்ரித்வி பாண்டியராஜன் ஆகியவர்களின் நடிப்பு சிறந்த ஒன்று. இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் இயக்கம் பாராட்டுக்குரியது. ஆனால் திரைக்கதை கொஞ்சம் போர் தான்.

சிறந்த கருத்துக்கள் இருந்தாலும், திரைக்கதை படத்தை கொஞ்சம் சொதப்பிவிட்டது. டி. இமானின் இசை எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு இல்லை. ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். கணேஷ் குமார் மற்றும் எஸ்.பி. அஹ்மத்தின் எடிட்டிங் ஆவெரேஜ்.

மொத்தத்தில் நஷ்டத்தில் விழவில்லை லாபம்.