மணத்தக்காளி சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Aug 14, 2022 - 00:00
 0  28
மணத்தக்காளி சாகுபடி முறை மற்றும் பயன்கள்

மணித்தக்காளியானது கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி, சுக்குட்டி கீரை மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.

இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது அதிகமாக உணவில் உட்கொள்ளப்படுகிறது.

இது தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பயிர் செய்யப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?

பருவம்

அனைத்து பருவத்திலும் பயிர் செய்யலாம். டிசம்பர் மாதம் ஏற்ற பருவம் ஆகும்.

மண்

மணல் தவிர்த்து எல்லா வகை மண்ணிலும் வளரும்.

விதையளவு

விதைகள் மூலமே இது உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நாற்றங்கால் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பாத்திகள் அமைக்க வேண்டும். பழங்களை காயவைத்து விதைகள் சேகரித்து சாம்பலுடன் கலந்து பாத்திகளில் விதைகளை சீராக தூவ வேண்டும்.

நிலம் தயாரித்தல்

ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்துடன், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்ய வேண்டும். பின் அதில் தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.

நடவு செய்தல்

கன்றுகள் 30 செ.மீ x 45 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நட்ட செடிகள் மூன்று மாத இடைவெளியில் 120 செ.மீ வரை வளர்ந்து விடும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். பயிரில் பூ அரும்பும் வரை பாசனம் செய்ய வேண்டும். பாசனம் செய்யும் போது ஜீவாமிர்தக் கரைசலை கலந்து விடுவதால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.

உரங்கள்

ஒரு எக்டருக்கு தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 40 கிலோ மற்றும் சாம்பல் சத்து 40 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக அளிக்க வேண்டும். தழை மற்றும் மணிச்சத்தை 2 அல்லது 3 பிரிவுகளாக பிரித்து அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

களை வளருவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். செடி நட்ட 15-20 நாட்களுக்குள் களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

கீரையின் இலையும், தண்டும் உணவாக உட்கொள்ளும் பகுதிகள். இவற்றின் மீது பூச்சிமருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இலை உண்ணும் புழுக்கள்

இலை உண்ணும் புழுக்கள் தோன்றும் போதே, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். அத்துடன் காதி சோப்பை சேர்ப்பதால், அது நீரையும் எண்ணையையும் ஒட்டும் திரவமாக பயன்படும்.

அறுவடை

30 நாட்களில் கீரைகளை அறுவடை செய்யலாம்.

மருத்துவ பயன்பாட்டிற்கு செடிகளை வேருடன் பறித்து, வேர் பாகம் தவிர்த்து மேல் பகுதிகளான இலை, தண்டு முதலியன துண்டு துண்டாக வெட்டி காய வைக்க வேண்டும்.

காய வைப்பதற்கு முன் பழங்களை பறித்து விடுவதன் மூலம் விரைவாக காயவும் மற்றும் பூஞ்சாணம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

மூன்று நாட்கள் வரை நன்கு காய்ந்தபின் சாக்கு பைகளில் நிரப்ப வேண்டும். காய்ந்த செடியில் ஈரப்பதம் 8% மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மகசூல்

ஒரு ஏக்கருக்கு 1000-1500 கிலோ வரை காய்ந்த மகசூல் கிடைக்கும்.

பயன்கள்
  • இந்தக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், குடல் புண், வாய்ப்புண், பால்வினை நோய்கள், உடல் உஷ்ணம், கர்பப்பை கோளாறுகள், மலச்சிக்கல், காமாலை, தலைவலி போன்ற நோய்களை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
  • இக்கீரையின் சாறெடுத்து அதை வாயில் இட்டு சிறிது நேரம் கழித்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். வாய் துர்நாற்றமும் இல்லாமல் போய் விடும். வயிற்றுப்புண்களால் அவதிப்படுவோர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் கீரை சாற்றினை ஒரு அவுன்ஸ் வீதம் சுமார் பத்து நாட்கள் பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
  • இந்தப்பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வர கர்பப்பை பலமடைந்து சுகப்பிரசவம் ஏற்படும்.
  • மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டு வருவதால் வாயில் ஏற்பட்ட ரணம், உடலில் ஏற்பட்ட சூடு, வாத வீக்கங்கள், குடல் புண்கள் ஆறும். வயிற்றுப்பூச்சிகளை கொள்ளும் தன்மை கொண்டது.
  • மணத்தக்காளி செடியின் வேர் முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. எந்த வகையிலாவது மணத்தக்காளியை உணவுடன் சேர்த்து கொள்வது என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow