மீண்டும் வருகிறார் வைகைப்புயல் மகிழ்ச்சியில் ரசிகர்கள் .

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர் வடிவேலு.

Aug 29, 2021 - 10:06
Aug 29, 2021 - 10:08
 0  48
மீண்டும் வருகிறார் வைகைப்புயல்   மகிழ்ச்சியில் ரசிகர்கள் .

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர் வடிவேலு. 1991ம் ஆண்டு வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' படம் மூலம் சினிமாவில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து நம்பர் 1 நகைச்சுவை நடிகர் என்ற இடத்தைப் பிடித்தார். 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால், அப்போதைய தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

அதன்பின் வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தயங்கினார்கள். 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தப் பிரச்சாரமும் செய்யாமல் அமைதி காத்தார் வடிவேலு. கடந்த பத்து வருடங்களில் வடிவேலு நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து ஐந்தே ஐந்து திரைப்படங்களும், நாயகனாக நடித்து 'தெனாலிராமன், எலி' ஆகிய படங்களும் மட்டுமே வெளிவந்தன. கடைசியாக 2017ம் ஆண்டு வெளிவந்த 'மெர்சல்' படத்தில்தான் வடிவேலு நடித்தார்.

2017ம் ஆண்டு வடிவேலு நாயகனாக நடிக்க 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படம் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் ஆரம்பமாகி சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அதன்பின் ஏற்பட்ட கருத்து மோதலில் படம் நின்று போனது. வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க, வாய்மொழி உத்தரவாக அவர் மீது தடை விதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஒருவர் மீது அதிகாரப்பூர்வமாக 'ரெட் கார்டு' என்று சொல்லப்படும் தடை விதிக்கும் அதிகாரம் எந்த ஒரு சங்கத்திற்கும் இல்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து சுமூக முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து, கொரானோ நிதியாக 5 லட்ச ரூபாயையும் வழங்கினார். அதன்பின்புதான் திரையுலகக் காட்சிகள் மிக வேகமாக மாறியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

வடிவேலு பற்றிய பஞ்சாயத்தை உடனடியாக விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது, இயக்குனர் ஷங்கர் தரப்பிற்கும் சுமூகமாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிகிறது. அது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பது, “தமிழக முதல்வரைசச் சந்தித்த பிறகுதான் எனக்கு நல்ல நேரம் தொடங்கியது. முதல்வர் ஸ்டாலினை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.

வடிவேலு அடுத்து நாயகனாக நடிக்க உள்ள, லைக்கா தயாரிக்க உள்ள 'நாய் சேகர்' படம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், நான்கு புதிய படங்களில் அவரை லைக்கா நாயகனாக நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எப்படியிருந்தாலும் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள நகைச்சுவைப் பஞ்சத்தை தீர்த்து வைக்க வடிவேலு நடிக்க வந்துள்ளது பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow