திருக்குறள் - குறள் 95

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


திருக்குறள் - குறள் 95


பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

மு.வரதராசனார் உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

சாலமன் பாப்பையா உரை:
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

பரிமேலழகர் உரை:
ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார்.


மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பணிந்து நடத்தலும், இன்சொல்லும் ஆகிய இரண்டும் ஒருவருக்கு அணிகலன்களாகும். மற்றவை அணிகலன்கள் ஆகா.

Translation:
Humility with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth.

Explanation:
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்