திருக்குறள் - குறள் 93

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


திருக்குறள் - குறள் 93


முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

மு.வரதராசனார் உரை:
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

பரிமேலழகர் உரை:
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் த


மணக்குடவர் உரை:
கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முகத்தினால் விரும்பி இனிமையாகப் பார்த்து மனத்துடன் பொருந்திய இனிய சொற்களைச் சொல்லுவதில் அமையப் பெற்றதே அறமாகும்.

Translation:
With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity.

Explanation:
Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்