திருக்குறள் - குறள் 100
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.
திருக்குறள் - குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
மு.வரதராசனார் உரை:
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
பரிமேலழகர் உரை:
இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('
மணக்குடவர் உரை:
பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அறம்பயக்கும் இனிமையான சொற்களும் தன்னிடத்தே இருக்க, அவற்றைக் கூறாமல் கடுஞ்சொற்களைச் சொல்லுதல், கனிகள் தன்னிடம் இருக்கும்போது காய்களைத் தின்பது போன்றதனை ஓக்கும்.
Translation:
When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
Explanation:
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்