திருக்குறள் - குறள் 632
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: அமைச்சு.
திருக்குறள் - குறள் 632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.
மு.வரதராசனார் உரை:
அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா உரை:
செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.
பரிமேலழகர் உரை:
வன்கண் - வினை செய்தற்கண் அசைவின்மையும்; குடிகாத்தல் - குடிகளைக காத்தலும்; கற்று அறிதல் - நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; ஆள்வினையொடு - முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு - மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான். (எண
மணக்குடவர் உரை:
அஞ்சாமையும், குடிகாத்தலும், இந்திரியங்களைக் காத்தலும், நூல்முகத்தானறிதலும், முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். இவை அமைச்சனாவதன் முன்னே வேண்டுமாதலின், இது முற்கூறப்பட்டது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தொழில் செய்யுங்கால் மனம் தளராமையும், குடிகளைக் காத்தலும், நீதி நூல்களைக் கற்று, நல்லன தீயனவற்றை அறிதலும், முயற்சியும் ஆகிய இந்த ஐந்தும் சிறப்பாக உடையவனே அமைச்சனாவான்.
Translation:
A minister must greatness own of guardian power, determined mind,
Learn'd wisdom, manly effort with the former five combined.
Explanation:
The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்