திருக்குறள் - குறள் 622

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: இடுக்கணழியாமை.


திருக்குறள் - குறள் 622


வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.

மு.வரதராசனார் உரை:
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

பரிமேலழகர் உரை:
வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும். (இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீ


மணக்குடவர் உரை:
வெள்ளம்போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும். இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
வெள்ளம் போலக் கரையில்லாத துன்பங்கள் (இடும்பைகள்) எல்லாம், அறிவுடையவன் தனது உள்ளத்தினாலே நினைத்துப் பார்க்க அப்பொழுதே கெடும்.

Translation:
Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone.

Explanation:
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்