திருக்குறள் - குறள் 572

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கண்ணோட்டம்.


திருக்குறள் - குறள் 572


கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

மு.வரதராசனார் உரை:
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

சாலமன் பாப்பையா உரை:
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

பரிமேலழகர் உரை:
உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.
(உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை:
உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது: ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம். இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உலக நடைமுறையென்பது கண்ணோட்டத்தினால் நிகழ்வதாகும். ஆதலால், கண்ணோட்டோம் இல்லாதவர்கள் இருப்பது இந்நிலத்திற்குப் பாரமாகும்.

Translation:
The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear.

Explanation:
The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்