திருக்குறள் - குறள் 571
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கண்ணோட்டம்.
திருக்குறள் - குறள் 571
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.
மு.வரதராசனார் உரை:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.
பரிமேலழகர் உரை:
கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் - கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு - இவ்வுலகம் உண்டாகாநின்றது.
('கழிபெருங்காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி, இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வு
மணக்குடவர் உரை:
கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன்மாட்டு உண்டானபடியினாலே, இவ்வுலகநடை யாகின்றது. இஃது அஃதில்லையாயின் உலகங்கெடும் ஆதலால் கண்ணோடவேண்டுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
கண்ணோட்டோம் (பழகியவர் மீது அன்புடைமை) என்னும் சிறப்புடைய அழகு இருந்து வருவதால்தான் இந்த உலகம் இருந்து வருகின்றது.
Translation:
Since true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides.
Explanation:
The world exists through that greatest ornament (of princes), a gracious demeanor.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்