திருக்குறள் - குறள் 557
- குறள் பால்:
- பொருட்பால்
- குறள் இயல்:
- அரசியல்
- அதிகாரம்:
- கொடுங்கோன்மை
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
திருக்குறள் - குறள் 557 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.
மு.வரதராசனார் உரை
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
சாலமன் பாப்பையா உரை
மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.
பரிமேலழகர் உரை
'துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.
(சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது. மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.).
மணக்குடவர் உரை
உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு. இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை
மழை இல்லாமையானது உலகில் வாழும் உயிர்களுக்கு எவ்வகைத் துன்பத்தினை உண்டாக்குமோ, அவ்வகைத் துன்பம் அருளில்லாத வேந்தன் நாட்டில் வாழும் மக்களுக்கு உண்டாகும்.
Translation
As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.
Explanation
As is the world without rain, so live a people whose king is without kindness.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 56: கொடுங்கோன்மை
குறள் 551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.
குறள் 552 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.
குறள் 553 நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்.
குறள் 554 கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.
குறள் 555 அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.
குறள் 556 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி.
குறள் 558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.
குறள் 559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.
குறள் 560 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.