திருக்குறள் - குறள் 552

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கொடுங்கோன்மை.


திருக்குறள் - குறள் 552


வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

மு.வரதராசனார் உரை:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

பரிமேலழகர் உரை:
வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்.
('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல். கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தண்டிக்கும் தொழிலோடு நின்ற அரசன் குடிமக்களிடம் பொருள் வேண்டிக் கேட்டல், வேற்படைகளுடனே தனியே நின்ற கள்வன் வழிப்போக்கனை நோக்கிக் கைப்பொருளினைத் 'தா' என்பதனோடு ஒக்கும்.

Translation:
As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.

Explanation:
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்