திருக்குறள் - குறள் 554

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கொடுங்கோன்மை.


திருக்குறள் - குறள் 554


கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

மு.வரதராசனார் உரை:
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

சாலமன் பாப்பையா உரை:
மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

பரிமேலழகர் உரை:
சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும்.
('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப).

மணக்குடவர் உரை:
பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன். இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பின்னர் விளைவதனையறியாமல் முறைதப்பச் செய்யும் அரசன், அச்செயலால் முன்பு ஈட்டிய பொருளையும் பின்பு ஈட்டுவதற்கு ஏதுவாகிய குடிமக்களையும் இழப்பான்.

Translation:
Whose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose.

Explanation:
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்