திருக்குறள் - குறள் 520

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துவினையாடல்.


திருக்குறள் - குறள் 520


நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

மு.வரதராசனார் உரை:
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பரிமேலழகர் உரை:
வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது, மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க.
(அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும், ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும். இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.


Translation:
Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.

Explanation:
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்