திருக்குறள் - குறள் 521
- குறள் பால்:
- பொருட்பால்
- குறள் இயல்:
- அரசியல்
- அதிகாரம்:
- சுற்றந்தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
திருக்குறள் - குறள் 521 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
மு.வரதராசனார் உரை
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
சாலமன் பாப்பையா உரை
ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.
பரிமேலழகர் உரை
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன.
(சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல் சுற்றத்தார்மாட்டே யுளவாம். இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை
ஒருவன் செல்வமிழந்து வறியவனான காலத்திலும் அவனுடைய பழைமையை எடுத்துக் கொண்டாடுகின்ற இயல்புகள் சுற்றத்தாரிடம் இருப்பனவாகும்.
Translation
When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know.
Explanation
Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 53: சுற்றந்தழால்
குறள் 522 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்.
குறள் 523 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.
குறள் 524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்.
குறள் 525 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்.
குறள் 526 பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்.
குறள் 527 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள.
குறள் 528 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.
குறள் 529 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும்.
குறள் 530 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்.