திருக்குறள் - குறள் 429

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


திருக்குறள் - குறள் 429


எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

மு.வரதராசனார் உரை:
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.

பரிமேலழகர் உரை:
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு, அதிர வருவது ஓர் நோய் இல்லை - அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.
('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம்இன்மை இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை. இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது.


Translation:
The wise with watchful soul who coming ills foresee;
From coming evil's dreaded shock are free.

Explanation:
No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்